மக்களை சென்றடையும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published Date: May 9, 2023

CATEGORY: CONSTITUENCY

"தமிழ்நாடு அரசு மக்களை சென்றடையும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது" என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டுகளை சிறப்புடன் நிறைவு செய்திருக்கிறது. இதையொட்டி அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமை ஆதீனம் மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். மேரி இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று, 342 பயனாளிகளுக்கு ரூ. 2.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது "சமூக நீதி, சமத்துவம், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, கல்வி, என்று முதலமைச்சர் கூறும் அடிப்படை இலக்கு எங்கள் அரசில்  முக்கியமானது. தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறையை மாற்றி திமுக அரசு பல புதிய திட்டங்களை செயல்பட்டு வருகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள் வாயிலாக உண்மையான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றப்படுகின்றன. அரசின் செயல்பாடுகள் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகளை நான் அமைத்து தந்திருக்கிறேன். தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் மக்களை சென்றடையும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் திட்டங்களை மட்டுமே அமல்படுத்திக் கொண்டிருக்கிறது"என்றார். இதில் துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran